நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து விஷேட பூஜை உபயங்களில் கலந்து கொள்ளும் அடியார் பெருமக்களுக்கு நிர்வாக சபையினர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கின்றோம்.
அதாவது ஆலயத்தில் நடைபெற்று வருகின்ற வெள்ளிக்கிழமை அபிஷேகம், அன்னதானம், கார்த்திகை உற்சவம் மற்றும் விசேட பூஜை உபயங்களில் பங்குகொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் முருகையாவின் அன்பர்களிடம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
அந்தவகையில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வருகின்ற உபயங்களில் கலந்து கொள்கின்ற அனைத்து உபயகாரர்களும் தங்களின் நிரந்தர முகவரிகளையும், தொலைபேசி இலக்கங்களையும் ஆலய முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
ஏனெனில் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து உபயங்களில் கலந்து கொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழ்கின்ற உபயகாரர்கள் அனைவருக்கும் அருள்மிகு முருகையாவின் பாதக்கமலங்களில் சாற்றிய வீபூதி பிரசாதம் அனுப்பி வைப்பதற்கு நிர்வாக சபையினர் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் தங்களின் உபயம் வருகின்ற காலத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்பதற்காகவும் மேற்படி வேண்டுதலை விடுக்கின்றோம்.
கடந்த 20-08-2017 அன்று ஆலயத்தில் நடைபெற்ற நிர்வாக சபையினரின் கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
தற்போது ஆலயம், தாங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து வழங்கிய பங்களிப்பினால் சுற்றுக்கொட்டகை திருப்பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.
அதேவேளை, 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஆலய முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு கரும பீட அலுவலர் ஒருவரை நியமித்துள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
அவர் ஆலயத்தில் தினமும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் கடமையாற்றுவார். அடியார்கள் அவருடன் தொடர்பு கொள்வதற்கு 0094 77 44 15 105 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பேச முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு